ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்...!

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்...!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் அறிவித்துள்ளனர். 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக ஈ.பி.எஸ். தரப்பில் தென்னரசுவும், ஓ.பி.எஸ். தரப்பில் செந்தில் முருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றதில் நடைபெற்ற வழக்கில், ஓ.பி.எஸ்.ஐயும் இணைத்து பொதுக் குழுவைக் கூட்டி, ஒரே வேட்பாளரை  தேர்வு செய்ய வேண்டும் என்றும், இதனை அவைத் தலைவர்  தமிழ்மகன் உசேன் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அவைத்தலைவர் பரிந்துரையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதனையடுத்து, ஈ.பி.எஸ். தரப்பில் பொதுக் குழு கூட்டி தென்னரசுவை வேட்பாளராக தேர்வு செய்தனர். ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் பெயர் இடம் பெறாத நிலையில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிக்க : எல்ஐசி, எஸ்பிஐ வங்கிகள் முன்பு காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்... !

இந்நிலையில், இது குறித்து ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின்னர் ஓ.பி.எஸ். தரப்பினரான முன்னாள் அமைச்சர்  கு.ப. கிருஷ்ணன், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கு.ப. கிருஷ்ணன், ஈரோடு கிழக்குத் தொகுதியில்  தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இரட்டை இலை சின்னம் முடங்குவதைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இரட்டை இலை சின்னத்தை ஆதரித்து, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என்றும் கூறினார். 

இதனிடையே ஈரோட்டில் ஈ.பி.எஸ். தரப்பில் ஆலோசனைக் கூட்டத்தில் மேடையில் பேசிய செங்கோட்டையன், தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றதற்கு, அண்ணன் ஓ.பி.எஸ்.க்கு நன்றி என்று கூறி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். இருவரும் ஓரணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.