அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 2022 ஜூலையில் நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் நீதிமன்றத்தை ஓ பன்னீர் செல்வம் தரப்பு நாடியது.
இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு கடந்த 22ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம் என்றும் ஆனால் முடிவை வெளியிடக்கூடாது எனவும் கூறியது. மேலும் மார்ச் 24ம் தேதி அதாவது இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி குமரேஷ் பாபு கூறினார். இதனால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும் என அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றைய விசாரணையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும் வழக்கு பட்டியலிடப்படவில்லை என்பது இதற்கு காரணமாகும்.
இதையும் படிக்க: வாக்கு எந்திரங்களில் குளறுபடியா... எதிர்க்கட்சிகள் ஆலோசனை!!