மணிப்பூர் விவகாரம் : கடிதம் அனுப்பியும் பதில் இல்லை - தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு!

மணிப்பூர் விவகாரம் : கடிதம் அனுப்பியும் பதில் இல்லை - தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநில அரசிற்கு 3 முறை கடிதம் எழுதியும் பதில் இல்லை என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார். 

மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநில அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு மூன்று முறை கடிதம் மூலம் புகார் அளித்ததாகவும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை 4 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூரில் குகி இனப் பெண்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் தாம் ஒரு இந்தியன் என சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், மணிப்பூர் சம்பவத்தை சாதாரண நிகழ்வாக கடந்து செல்ல முடியாது எனவும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுப்பது மாநில முதலமைச்சரின் கடமை எனவும் கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைகுனியச் செய்துள்ளதாகவும், 140 கோடி இந்தியர்களும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார். 

இதேபோல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டியும் மணிப்பூர் சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மணிப்பூா் வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் எனவும், அதேசமயம், மக்களுக்கு ஏற்படும் வேதனை மற்றும் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவிக்கும் சக மனிதா்களாக தாங்கள் எப்போதும் இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com