பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்... நிர்மலா சீதாராமன்!!

பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்... நிர்மலா சீதாராமன்!!
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் என்ற அமெரிக்க குழுவில், இந்தியா குறித்த எதிர்மறையான கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகுந்த பதில் அளித்துள்ளார். 

சிறுபான்மையினர்:

இந்தியாவில் சிறுபான்மையினர் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதாகவும் அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் உலகின் முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும்,  இந்த மக்கள் தொகை மேலும் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.  

மேலும் 1947ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவைப் பற்றி இப்படிச் சொல்வது சரியா என்று தான் கேட்க விரும்புவதாகவும் மறுபுறம், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை மோசமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

பாகிஸ்தானுடன்..:

இந்தியாவில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களும் அவர்கள் தொழிலைச் செய்து வருகிறார்கள் எனவும் அவர்களின் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள், அவர்களுக்கு பெல்லோஷிப் வழங்கப்படுகிறது எனவும் கூறிய அவர் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது சிறிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மரண தண்டனை போன்ற பெரிய தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.  

பாகிஸ்தானில் பல சட்டங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.  ஒரு நடுவர் மன்றத்தின் கீழ் முறையான விசாரணை நடத்தப்பட்டாலும் அல்லது விசாரணை நடத்தப்படாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது.

எதிர்மறையானவர்கள்:

இந்நிலையை இந்தியாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் சிறுபான்மையினர் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவுமே வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.  இந்தியாவில் நடைபெறும் ஆட்சி பிடிக்காதவர்களே இது போன்ற எதிர்மறையான கருத்துகளை பரப்பி வருகின்றனர் எனவும் நிதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com