அக்கம் பக்கம் கண்காணிப்பு திட்டம்.... திட்ட நோக்கம்?!!

அக்கம் பக்கம் கண்காணிப்பு திட்டம்.... திட்ட நோக்கம்?!!

Published on

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருக்கும் வகையில் அக்கம், பக்கம் கண்காணிப்பு என்ற திட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

அக்கம் பக்கம் திட்டம்:

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருக்கும் வகையில் அக்கம், பக்கம் கண்காணிப்பு என்ற திட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாக போரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அய்யப்பன் தாங்கலில் 2600 குடியிருப்புகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அக்கம், பக்கம் கண்காணிப்பு என்ற திட்டம் இன்று ஆவடி காவல் ஆணையரக இணை கமிசனர் விஜயகுமார் தலைமையில் தொடங்கப்பட்டது.   இந்த திட்டத்தின்படி அந்தப் பகுதிக்கு ஒரு போலீஸ்காரர் தொடர்பாளராக நியமிக்கப்படுவார். 

இதற்காக போலீசார் குடியிருப்பு பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணிப்பார்கள்.  மேலும் அந்தப் பகுதியில் தகவல் குழு அமைக்கப்படும், இந்த குழுவுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார்.  அந்த தகவல் குழு மூலம் குற்றச்சம்பவங்கள் குறித்த தகவல்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பிரச்சனைகள், பாதுகாப்பு, போதை பொருள் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சைக்கிள் பேரணி:

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போரூர் காவல் நிலையத்திலிருந்து குடியிருப்பு பகுதி வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது.  இதில் ஏராளமான போலீசார், குடியிருப்புவாசிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குற்றங்கள் நடக்காமல் தடுப்பது குறித்தும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், பொதுமக்கள் போலீசாருடன் எத்தகைய வகையில் தகவல்களை பறிமாறி கொள்வது குறித்தும் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

திட்டம் என்ன?:

பின்னர் இது குறித்து ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது “அக்கம் பக்கம் கண்காணிப்பு” என்ற திட்டமாகும்.  ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைகளில் இருக்கிற குடியிருப்பு பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு, விரிவாக்கப் பகுதிகளில் போலீசார் சைக்கிளில் ரோந்து சென்று அந்த பகுதி மக்களிடம் கலந்துரையாடி, குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு கண்டறிவதற்கான நடவடிக்கையாகும்.  இதற்காக அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு குழு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார், அவர்கள் காவல்துறையினரிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்.  அந்த பகுதியில் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு அவர்கள் காவல்துறைக்கு உதவியாக இருப்பார்கள்.  

குற்றமில்லா பகுதி:

குறிப்பாக பொது இடங்களில் மது அருந்துவது, போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்கள் பாதுகாப்பு, மாணவ மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதி குற்றங்கள் நடக்காத பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அந்தப் பகுதியில் அக்கம் பக்கம் கண்காணிப்பு என்ற போர்டு வைக்கப்படும்.  குற்றமில்லா பகுதியாக அறிவிப்பதற்கு, அதை நடைமுறை படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  

பயிற்சி:

ஆவடி காவல் ஆணையரகத்தில் 61 ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.  நாளொன்றுக்கு 250 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.  6 முதல் 8 நிமிடங்களில் எந்த பகுதியில் புகார் வந்ததோ அந்த பகுதிக்கு போலீசார் செல்லக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அக்கம் பக்கம் கண்காணிப்பு திட்டத்தில் குடியிருப்பு பகுதி தரப்பில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பாளருக்கு காவல்துறை சார்பில் உரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.  அவர்கள் மூலம் தகவல் பெறப்பட்டு குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com