நாசா விண்வெளிக்கு அனுப்பிய ஆா்டெமிஸ்-1 ஓாியன் விண்சிமிழ் வருகிற 11-ம் தேதி கடலில் விழும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆர்டெமிஸ் 1 விண்கலம்:
மனிதா்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் நாசா தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதற்காக நாசா விண்வெளி ஆர்டெமிஸ் என்ற புதிய திட்டத்தை தொடங்கி, விண்வெளி வீரா்கள் யாரும் இல்லாமல் சோதனை அடிப்படையில், ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை கடந்த மாதம் விண்ணில் செலுத்தியது. இதில் இருந்த ஓாியன் விண்சிமிழ் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்து, முக்கியமான டேட்டாக்களையும் சேகாித்துவிட்டது.
மீண்டும் தொடங்கிய நாசா:
முன்னதாக, பூமியில் இருந்து மனிதர்களை முதல்முறையாக நிலவுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா தான். கடந்த 1960களின் பிற்பகுதியில் ”அப்பல்லோ விண்வெளி” திட்டத்தின் மூலம் மனிதர்கள் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கினர். இது மனிதக் குலத்திற்கு வரலாற்று ரீதியாக முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியை தற்போது மீண்டும் நாசா தொடங்கி உள்ளது. இதற்காகத் தான் ஆர்டெமிஸ் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
4,01,798 கிமீ தொலைவு சென்ற விண்கலம்:
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் முதல்படியாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மூலம் ஆளில்லாத சாட்டிலைட்டை கடந்த வாரம் நாசா அனுப்பியது. இந்த ஓரியன் காப்ஸ்யூல் இப்போது பூமியில் இருந்து சுமார் 4,01,798 கிமீ தொலைவிற்குச் சென்றுள்ளது. மனிதர்களைத் தாங்கிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட விண்கலம் ஒன்று பூமியில் இருந்து இவ்வளவு தூரம் செல்வது இதுவே முதல்முறையாகும்.
சாதனையை முறியடித்த ஆர்டெமிஸ்1:
இதற்கு முன்னர் நாசாவின் அப்பல்லோ 13 விண்கலம் கடந்த 1970 ஏப்ரல் 14ஆம் தேதி பூமியில் இருந்து அதிகபட்சமாக 4,00,171 கிமீ சென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஆர்டெமிஸ் 1 சுமார் 4,01,798 கிமீ தொலைவிற்குச் சென்று முறியடித்துள்ளது.
கடலில் விழுமா?:
இந்நிலையில் நாசா விண்வெளிக்கு அனுப்பிய ஆா்டெமிஸ்-1 ஓாியன் விண்சிமிழ் கடந்த டிசம்பர் 1-ம் தேதி பூமியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. அதன்படி, ஓாியன் விண்சிமிழ் வருகிற 11-ம் தேதி கடலில் விழும் என எதிா்பாா்க்கப்படுகிறது.