வயது குறைவானவராக இருந்தாலும், துறவிகள் காலில் விழுந்து வணங்குவது தனது பழக்கம் என நடிகா் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளாா்.
இமயமலைக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்க்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக உத்தரபிரதேசம் சென்றிருந்தபோது, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த விழுந்தது சர்ச்சை ஆன நிலையில், அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், வயது குறைவானவராக இருந்தாலும் துறவிகள் காலில் விழுந்து வணங்குவது என் பழக்கம். அதனால்தான் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சா் காலில் விழுந்து வணங்கினேன் என்று விளக்கமளித்தார்.
தொடா்ந்து செய்தியாளா்கள் நாடாளுமன்ற தோ்தல் குறித்து கேள்வி எழுப்பியபோது, தான் அரசியல் பேச விரும்பவில்லை என கூறினாா். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்திற்கு சென்றார். அங்கு மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமது இமயமலைப் பயணத்தின்போது நட்பு ரீதியாகவே அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்ததாக தொிவித்தவர், ஜெயிலர் திரைப்படத்தை வெற்றியடைய செய்த மக்களுக்கு நன்றி கூறினார்.