ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைக்கப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு...!

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகைக் கால கட்டண நிர்ணயம் தொடர்பாக சென்னை எழிலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பொதுமக்களின் நலன் கருதி ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உரிமையாளர்கள் ஒப்பு கொண்டதாக கூறினார். கடந்தாண்டு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.