நீதி வெல்லும்...மல்யுத்த வீராங்கணைகளின் கைது...ஆதரவு தெரிவித்த அமைச்சர் உதயநிதி...!

நீதி வெல்லும்...மல்யுத்த வீராங்கணைகளின் கைது...ஆதரவு தெரிவித்த அமைச்சர் உதயநிதி...!

பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களுக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளாா். 

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த நட்சத்திரங்கள், கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 4 மாத போராட்டத்தை அடுத்து பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். இருந்தும் கூட, அவர் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி மல்யுத்த நட்சத்திரங்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட முயன்றனர்.

விவசாயிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த நிலையில், ஏராளமான பெண் விவசாயிகள் இதில் பங்கேற்றனர். இந்நிலையில் பேரணி தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார், மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் பொகாட், சாக்சி மாலிக் உள்ளிட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஆதரவு...ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

தொடர்ந்து பேரணியில் ஈடுபட்ட பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை தரதரவென இழுத்துச் சென்று போலீசார் கைது செய்த நிலையில், தரையில் விழுந்து கும்பிட்டு கேட்டுக் கொண்டோரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியிலேயே இருந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்பதாக மல்யுத்த வீரர்களும், விவசாயிகள் சங்கத்தினரும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, போராட்ட ஏற்பாட்டாளர்கள் உட்பட பலர் மீது 6 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நீதி கேட்டு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய டெல்லி காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தாா். மேலும், நமது சாம்பியன்கள் நடத்தப்பட்ட விதம் அருவருப்பானது மற்றும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. நீதி வெல்லும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தாா்.