சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளாா்
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளாா். சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உள்பட முக்கிய காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா். மாநிலத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காவல் துறையில் மேற்கொள்ள உள்ள சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பெருகிவரும் குற்றச்செயல்களை தடுப்பது குறித்தும், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து முறையே குட்கா மற்றும் கஞ்சா கடத்தப்படுவதை தடுப்பது குறித்தும், குற்ற விசாரணை சட்ட விதி 110ல் மாற்றம் கொண்டு வருவது, குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் வழங்குவது உள்ளிட்ட சட்டத்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.