பாதிரியாரால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக மைக்செட் ஆப்ரேட்டர் புகார்!

பாதிரியாரால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக மைக்செட் ஆப்ரேட்டர் புகார்!
Published on
Updated on
2 min read

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பங்குத் தந்தை மீது புகார் கொடுத்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக மைக் செட் ஆப்ரேட்டர் மாவட்ட ஆட்சியரிடம்  குடும்பத்தினருடன் வந்து புகார்.

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள வடகாட்டு பட்டியை சேர்ந்தவர் அருள் பிரான்சிஸ். இவர் அதே பகுதியில் மைக் செட் மற்றும் டெக்கரேஷன் சாமான்களை வாடகைக்கு விட்டு வருகிறார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருவிழா காலங்களில் மைக் செட், லைட் உள்ளிட்ட டெக்கரேஷன் வேலைகளை இவர் செய்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த அருள் பிரான்சிஸ் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது, "எங்கள் ஊரில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில்  பீட சிறுவனாக இருக்கும் (கோவில் சிஷ்ய பிள்ளை) ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு ஆலய பங்கு தந்தை அடைக்கலராஜ் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து அச்சிறுவன் என்னிடம் கூறினான். 

நான் சிறுவனின் தாய்மாமன் உதவியுடன் சிறார் பாதுகாப்பு மையத்திற்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தேன். மேலும் மனித உரிமை ஆணையம், சாணார்பட்டி காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் சிறுவனை அழைத்துச் சென்று நேரில் புகார் அளித்தேன். அதேபோல் திண்டுக்கல் திருச்சபைக்கு தலைமை இடமான ஆயர் இல்லத்திலும், நடந்த சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதனால் கோபமடைந்த பங்குத்தந்தை அடைக்கலராஜ் ஊர் நாட்டாமை, உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்களோடு சேர்ந்து கொண்டு எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் எனது தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகளில் யாரும் கலந்து கொள்வதில்லை. எங்கள் தோட்டத்திற்கு யாரும் வேலைக்கு வருவதில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம்" என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே  குற்றம் சாட்டப்பட்ட பங்குத்தந்தை அடைக்கல ராஜினை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "என் மீது புகார் கொடுத்துள்ள அருள் பிரான்சிஸ்க்கும் எனக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. நான் இங்கு பங்குத்தந்தையாக வந்த பின்னர் கிறிஸ்மஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில்
மைக் செட் மற்றும் லைட் போடுவதில் கூடுதலாக பணம் வசூலித்து அருள் பிரானசிஸ் முறைகேடு செய்தார்.

அதேபோல கோவிலில் உள்ள விளக்குகள் மற்றும் மின்சாதன பொருட்கள் பழுதாகி விட்டதாக பொய்யாக கூறி அடிக்கடி என்னிடம் பணம் மோசடி செய்தார். இதனை நான் தட்டிக் கேட்ட காரணத்தினால் என் மீது அபாண்டமாக புகார்  தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாக கூறும் சிறுவன் காவல் நிலையத்திலும் ஆயர் இல்லத்திலும் நான் உடல் ரீதியாக எந்தவித பாலியல் தொந்தரவும் கொடுக்கவில்லை என்று எழுதிக் கொடுத்துள்ளார். மேலும், ஊர் மக்களோடு சேர்ந்து நான் அந்த நபரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கவும் இல்லை. அந்த அதிகாரமும் எனக்கு இல்லை. வேண்டுமென்றால் நீங்கள் நேரில் வந்து விசாரித்துக் கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com