'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!

'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!
Published on
Updated on
2 min read

மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாக தேர்தல் குறித்த அறிவிப்பை  பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கிறார். திமுக, அதிமுகவில் உள்ளது போன்று துணை பொதுச்செயலாளர் பதவிக்கு மகளிருக்கு இடஒதுக்கீடு இம்முறை முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு குழப்பங்கள் உள்ள மதிமுகவில் மீண்டும் இவ்விவகாரத்தில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. கட்சிக்கு உழைத்தவர்கள் ஒரு பக்கம், கட்சிக்கு செலவு செய்பவர்கள் மறு பக்கம் என தாயகத்தில் போர்கொடி தூக்கி வருகின்றனர்.

நீண்ட காலமாக மதிமுகவில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கும் மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் இப்பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். பல்வேறு  போராட்டம் ஆர்ப்பாட்டம் என முழுநேர அரசியலில் உள்ள மல்லிகா பலமுறை இப்போராட்டங்களுக்காக சிறைக்கு சென்றவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மதிமுக மகளிரணி செயலாளர் குமரி, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், காஞ்சி மாவட்ட செயலாளர் சோமு  உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் இணைந்தனர். அப்போது மகளிரணி செயலாளர் பதவிக்கு கிடைக்கும் என மல்லிகா எதிர்பார்த்த நிலையில், ட்விஸ்ட் வைத்த வைகோ திருச்சியை சார்ந்த டாக்டர் ரொகையாவை மகளிரணி செயலாளராக நியமித்தார். கட்சியின் சூழல் கருதி அப்போது யாரும் பெரிதாக அவ்விவகாரத்தை எடுத்து கொள்ளவில்லை. அதுபோக வைகோ மகன் துரைக்கு  மிகவும் நெருக்கமான  வட சென்னை மாவட்ட செயலாளர் ஜீவனின் சம்மந்திதான் மல்லிகா என்பதால் அவருக்கு இம்முறை துணைப்  பொதுச் செயலாளர் பொறுப்பு  வழங்கப்படலாம் என கட்சி மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதே சமயம் 2011 ஆம் ஆண்டு கட்சிக்கு வந்த  டாக்டர் ரொகையா பொருளாதார ரீதியில் கட்சிக்கு பலமூட்டுபவர் என்பதால் அவருக்கு துணைப்பொதுச் செயலாளர் பதவி அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. ஆனால் அவர் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு கேட்டிருந்தும்  வழங்கப்படாததால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் திருச்சி மதிமுக நிர்வாகிகளின் ஒரு பிரிவு ரொகையாவிற்கு எதிராகவும் உள்ளனர். 

கடந்த முறை குமரி மாவட்டத்திற்கு வழங்கவேண்டிய பொறுப்பை வைகோ தனது உதவியாளர் ராஜேந்திரனுக்கு வழங்கியதால் இந்த வாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராணி செல்வினுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் குமரி மாவட்ட மதிமுகவினரும் அதே நேரத்தில்  பட்டுக்கோட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் ஜெயபாரதிக்கு தான் துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கவேண்டும் என டெல்டா  நிர்வாகிகளும் தலைமைக்கு  அழுத்தம்  கொடுத்து வருகிறார்களாம் .

ஏற்கனவே மதிமுக தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப் பட்டதில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை என பலர் போர்கொடி தூக்கினர். இதனை துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு பெண் நிர்வாகியை நியமிப்பதன் மூலம் சரிபடுத்தலாம் என மதிமுக தலைமை நினைத்து வந்தது. இந்நிலையில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் மதிமுகவில் இந்த பதவிக்கு இவ்வளவு போட்டி வருமா என்று நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பூதாகரமாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com