தமிழ்நாட்டில் திரையரங்கம், பேருந்து நிலையம் உள்ளிட்ட கூட்டமுள்ள பகுதிகளில் முக்ககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கேரளா, மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், அரியானா, இமாசலபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் தொற்று பாதிப்பு 3 இலக்கங்களில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.