குப்பை கூடமாக காட்சி அளிக்கும் மெரினா...!!

குப்பை கூடமாக காட்சி அளிக்கும் மெரினா...!!

மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதும் குப்பை காடாகவே காட்சியளிப்பதால் முகம் சுழித்து வெளியேறுகின்றனர் பொதுமக்கள்.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பொழுதை கழிப்பதற்காக பொதுமக்கள் கடற்கரைக்கு வருகை தருவது வழக்கமான ஒன்றாகும்.  ஆனால் நேற்றைய தினம் வழக்கத்திற்கு மாறாகவே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.  பொதுவாக மெரினா கடற்கரையின் கரையோரம் அமைந்திருக்கும் கடைகளின் அருகிலேயே குப்பைகள் அதிகமாக சேர்க்கப்படுவதால் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதனை அப்புறப்படுத்துவார்கள்.

கரையோரப் பகுதிகள் மட்டுமல்லாமல் கடற் பரப்பின் நடுப்பகுதியிலும் குப்பைகள் சிதறி கிடப்பதால் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.  வழக்கமாக காலை 5.30 மணி முதல் 8 மணி வரை கடற்கரையில் கிடக்கும் குப்பைகளை குப்பை சேகரிக்கும் வாகனத்தின் மூலமாகவும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவர்.  தற்போது அதிகளவு குப்பை காணப்படுவதால் நாள் முழுவதும் குப்பைகளை அகற்றும் பணி தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தண்ணீர் பாட்டில்,நெகிழி காகிதம்,கண்ணாடி பாட்டில் மற்றும் மக்கும் குப்பை என மெரினா கடற்கரை முழுவதும் குப்பையாகவே காட்சியளிக்கிறது.  கடற்கரையில் காலையில் தினந்தோறும் நடைப்பயிற்சி வருவோர் குப்பைகளை பார்த்தவாறு முகம் சுழித்து செல்கின்றனர்.  பொதுமக்களும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட்டால் தூய்மையான மெரினா கடற்கரையை உருவாக்கலாம் என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:   நிறைவடைந்த ஈரோடு வாக்குப்பதிவு.... பதிவான வாக்குகள் என்ன?!!