மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், கலவரத்திற்க்கு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில அரசை உடனடியாக பதவி விலகக்கோரியும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
80 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்களான மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டது முதல் அம்மாநிலமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது. 3 நாட்களுக்கு முன்னர் வெளியான காணொளி ஒன்றில் குக்கி பழங்குடி இனப் பெண்கள் இருவரை மைத்தேயி சமூகத்தை சேர்ந்த பலர் சாலையில் நிர்வாணமாக்கி தாக்கி கொண்டே இழத்துச்சென்றதும் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் கலவரம் தொடங்கிய காலகட்டத்தில் (மே 4) எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பெண்களை பாதுகாக்க தவறிய, பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு துணை போன
மணிப்பூர் மாநில பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 24 பெண்கள் கூட்டமைப்பு சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மணிப்பூர் விவகாரம்; மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு!