திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மாசித் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித்திருவிழா கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை மற்றும் மாலையில், சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்வேறு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு, குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது. மாலைமுரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் தேரோட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அவரது சகோதரர் கதிரேசன் ஆதித்தன் உள்ளிட்டோர் பெரிய தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தை தொடர்ந்து, மாசித் திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறவுள்ளது.