வீடியோவால் சிக்கிய மகிமைதாஸ் கைது... துப்பு கொடுத்தவருக்கு சன்மானம்!!!

வீடியோவால் சிக்கிய மகிமைதாஸ் கைது... துப்பு கொடுத்தவருக்கு சன்மானம்!!!
Published on
Updated on
1 min read

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை ஆபாசமாக பேசி தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும்  துப்பு கொடுத்தவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தமிழ் பேசக்கூடிய நபர் ஒருவர் தாக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.  குறிப்பாக அந்த வீடியோவில் நீங்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள், நாங்கள் தான் இருக்கிறோமே, நாங்க எல்லா வேலையும் செய்து கொள்வோம் என வடமாநில இளைஞர்களை தாக்கி தகாத வார்த்தையால் அந்த நபர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு ஆபாசமாக பேசுதல்,சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  ஆனால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியாமல் இருந்து வந்ததால், வடமாநில இளைஞர்களை தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்தை தமிழக ரயில்வே காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது.  மேலும் இந்த நபர் பற்றிய விவரங்கள் தெரிந்தால் துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தை சேர்ந்த மகிமைதாஸ்(38) என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யபட்ட இவர் கூலி தொழிலாளி என்பதும், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் போது விருத்தாசலம் அருகே மகிமை தாஸ் வடமாநில இளைஞர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.  ஏற்கனவே மகிமைதாஸ் மீது சிறு வழக்குகள் இருப்பதாகவும், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.  மேலும்  துப்பு கொடுத்த நபருக்கு தக்க சன்மானம் தர இருப்பதாகவும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com