ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக பொன்விழா மாநாடு தொடர்பாக மதுரை மாநாட்டு குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
மேலும், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் இந்த மாநாட்டிற்கு 'வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு' என பெயரிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 9ஆம் தேதி பொன் விழா மாநாட்டுக்கான கால்கோள் விழா பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் செய்திருந்தனர். பல்வேறு முன்னாள் அமைச்சர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள பொன்விழா மாநாடு தொடர்பாக மதுரை மாநாட்டு குழுவுடன் இன்று காலை 10 மணி முதல் ஆலோசனை நடத்துகிறார் .
மதுரை மாநாட்டு குழுவுடன் காலை 10 மணிக்கு ஆலோசனை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநாட்டிற்கான ஏற்பாடுகள், மதுரை மாநாடு எப்படி அமைய வேண்டும், அதில் கலந்து கொள்ளும் தொண்டர்களைத் திரட்டும் பணிகள், மாநாட்டு நிகழ்வுகள் எப்படி அமைய வேண்டும் மற்றும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.