மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான (DPR) விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது மெட்ரோ இரயில் நிர்வாகம்.
சென்னையில் 2 ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ. தொலைவுக்கு சுமார் 8500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை சில மாதங்களுக்கு முன் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதைப் போல கோவை மெட்ரோ ரயில் திட்டம்139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் பணிகளை செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டப் பணிகளுக்கு ரூ.9 கோடி தமிழக அரசின் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழுவதும் தற்போது நிறைவடைந்து விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரிவான திட்ட அறிக்கையை தற்போது பெற்றுள்ள தமிழக அரசு அடுத்த கட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கும் பொழுது உரிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தொடங்கபட உள்ளன.
இதையும் படிக்க:கல்வி கண் திறந்த காரமராஜரின் பிறந்தநாளில் இன்று!