சென்னை உயர்நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்த மத்திய பிரதேச பெண்.... காரணம் என்ன?!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்த மத்திய பிரதேச பெண்.... காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா  தாக்கல் செய்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர் எனவும் மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.  வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு  கொண்டு சென்று விட்டால் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது எனவும் மனுவில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.  இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com