சென்னையில், சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலைமைச்சர், மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்துவம் பற்றி அறிவுறுத்தி பேசியுள்ளார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பெருநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது, எல்லோருக்குமான சமத்துவ இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களிடம் உள்ளதாகவும், திமுக ஆட்சியால் தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பள்ளிக் கல்வியுடன் நின்றுவிடாமல், கல்லூரி படிப்பு வரை மாணவர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியதோடு, மாணவர்களை கண்டதும் தனது பள்ளி பருவ காலம் தன் நினைவுக்கு வருவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகளில் தலா 50 மாணவர்களை வைத்து சிற்பி திட்டம் தொடங்கப்பட்டது என நினைவு கூர்ந்த முதலமைச்சர், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் தமிழ்நாடு, என்று பேசும் அளவுக்கு வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் மகத்தான சாதனை செய்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.