”இந்திய சமூகத்தினரை சந்திப்பதில் ஆவலுடன் இருக்கிறேன்...” பிரதமர் மோடி!!!

”இந்திய சமூகத்தினரை சந்திப்பதில் ஆவலுடன் இருக்கிறேன்...” பிரதமர் மோடி!!!
Published on
Updated on
2 min read

ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது அதனுடன் ஜி-20ன் அடுத்த உச்சி மாநாடு செப்டம்பர் 2023 இல் புதுதில்லியில் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்தோனேசியா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்தோனேசியாவில் ஜி-20:

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார்.  அங்கு பிரதமர் மோடி நவம்பர் 14 முதல் 16 வரை பாலியில் தங்குகிறார்.  ஜி-20 மாநாடு நவம்பர் 15-16 தேதிகளில் அனைத்து தலைவர்களின் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி சுமார் 45 மணி நேரம் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.  

இருதரப்பு விவாதங்கள்:

20 நாடுகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய குழுவான ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதுடன் அதில் பங்கேற்கும் 10 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார்.  இதில் பலதரப்பு மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை:

ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமையை இந்தியா 2023ல் பெறவுள்ளது.  இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

மூன்று அமர்வுகளாக உச்சிமாநாடு நடைபெறும் என்றும், மற்ற உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இந்த மூன்று அமர்வுகளிலும் பங்கேற்பார் என்றும் வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.  எந்தெந்த உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்திப்பார் என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் குவாத்ரா கூறியுள்ளார்.

மோடி- சுனக் சந்திப்பு:

ஜி-20 மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு சந்தித்தால் கடந்த மாதம் பிரிட்டன் பிரதமரான பிறகு ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாக இருக்கும். 

இந்திய சமூகத்தினரிடம் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்:

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா புறப்படும் பிரதமர் மோடி, நவம்பர் 15ஆம் தேதி பாலியில் உள்ள இந்திய சமூகத்தினரை சந்திப்பதில் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பாலி உச்சி மாநாட்டின் போது, ​​உலகளாவிய மேம்பாடு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஜி-20 தலைவர்களுடன் பரந்த அளவிலான விவாதங்களை நடத்துவேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com