விடுதலை படத்தின் முதல் பாகத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இயக்குனர் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக படப்பிடிப்பின்போது உயிரிழந்த சண்டைக் கலைஞர் சுரேஷின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெற்றிமாறன் :
இக்கதையின் தொடக்கமே இளையராஜாதான் எனவும் இளையராஜாவின் மியூசிக்கல் மைன்ட் பக்கத்தில் இருந்து பார்த்தது எனக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்தது எனவும் அவருடன் பேசிய ஒவ்வொரு விஷயமும் எனக்கு கற்றுக்கொண்ட தருணமாக இருந்தது எனவும் பேசியுள்ளார்.
இளையராஜா:
இப்படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத களத்தில் இருக்கும் எனவும் திரையுலகத்திற்கு வெற்றிமாறன் முக்கியமான இயக்குனர் எனவும் 1500 படம் பணியாற்றிய பிறகு இதனை சொல்கிறேன் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய இளையராஜா இப்படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் எனக் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் எல்ரெட் குமார்:
வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் எனவும் உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறிய எல்ரெட் குமார் இந்த தலைப்பை எங்களுக்கு வழங்கிய சுரேஷ் பாலாஜிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பு எங்களுக்கு கிடைத்தது பெருமை எனவும் இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் இளையராஜா தற்போதைய தலைமுறை வரைக்கும் போட்டியாக உள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும் இளையராஜாவின் ரசிகர்களுக்கு இது தனி கெத்து எனவும் அவரது கடின உழைப்புதான் அவரது வெற்றிக்கு காரணம் எனவும் பேசியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன்:
வெற்றிமாறன் படங்களை பார்க்க இந்தியா முழுவதும் ஒரு கூட்டம் உள்ளது எனவும் இப்படத்தில் இளையராஜா, வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை பார்க்கும் போது ஒரு அவெஞ்சர் மாதிரி இருக்கிறது எனவும் கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன். மேலும் தற்போது தமிழ் சினிமா பொற்காலத்தில் உள்ளது எனவும் இப்படம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் என்று நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.
நடிகர் சூரி:
“நமக்கும் கைதட்டல் வேண்டும் என்று நான்கு பேரை வரச்சொன்னேன். ஆனால் தயாரிப்பாளரை பேச விடாமல் பண்ணீட்டீங்களே. காமெடியனாக நிறைய மேடைகள் ஏறியுள்ளேன். முதல்முறையாக கதை நாயகனாக இந்த மேடை கிடைத்துள்ளது. இளையராஜா இசையில் நான் நடித்தது எனது பெற்றோரின் பெரும் புண்ணியம் என்று நினைக்கிறேன். சினிமாவில் மற்ற நடிகர்களை வாழ்த்தி முன்னேற்றுவது விஜய் சேதுபதி தான். விடுதலை படத்தின் காட்சிகளை பார்த்து எனக்கு போனில் மாறி மாறி முத்தம் கொடுத்தார். நீ காமெடியன் மட்டும்தான் என்று நீயே முடிவு பண்ணாத நீ ஒரு குணச்சித்திர நடிகர் என்றார். நான் கடைசிவரைக்கும் நடிகராக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எந்த வேடமாக இருந்தாலும் சரி. சமீப காலமாக நடிகருக்கு இணையாக இயக்குனர்களையும் ரசிக்கும் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அந்த இயக்குனர்களில் முதன்மையானவர் வெற்றிமாறன்.” எனப் பேசியுள்ளார் நடிகர் சூரி.
விஜய் சேதுபதி:
“என்னை 8 நாட்கள் படப்பிடிப்பு என்று சொல்லி என்னை ஏமாற்றியவர் வெற்றிமாறன். வட சென்னையில் நடிப்பதை தவறவிட்டுவிட்டேன். அதனால் அப்படத்தை நான் பார்க்கவே இல்லை. 8 நாள் என்னை வைத்து ஒத்திகை பார்த்தார். வெற்றிமாறன் வேலை செய்வதை எனது குழந்தைகளுக்கு காட்டினேன். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டதை எனது குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக. இதே இடத்தில் நடந்த ஆடுகளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கீழே உட்கார்ந்துகொண்டு இருந்தேன். ஆனால் இப்போது மேடையில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.