தாயார் ஹீராபென் மறைவு: ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

தாயார் ஹீராபென் மறைவு: ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஹீராபென் மறைவு:

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இன்று காலை 3.30 மணி அளவில் காலமானார். பிரதமர் மோடியும் தனது சமூக வலைதள பக்கத்தில் அதை உறுதி செய்திருந்தார்.

திரெளபதி முர்மு:

இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். அதன்படி ஹீரா பென் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கையின் மூலம் இந்திய லட்சியங்களின் அடையாளமாக திகழ்ந்தவர் எனவும், அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்:

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், ”தாய் ஹிராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை தாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது என்றும், உங்கள் இழப்புக்காக நான் வருந்துவதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும்” தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அண்ணாமலை:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி: 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி ஹிரா பா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தி, குலாம் நதி ஆசாத், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும்,  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட  பாஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.