"கருணாநிதி நூற்றாண்டு விழா" சாதனைகளை நினைவு கூர்ந்த தலைவர்கள்!

"கருணாநிதி நூற்றாண்டு விழா" சாதனைகளை நினைவு கூர்ந்த தலைவர்கள்!
Published on
Updated on
2 min read

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா துவக்கப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் சாதனைகளை நினைவு கூர்ந்தனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இதில் பேசிய வேல்முருகன், பல நூறு சாதனைகளைச் செய்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். வைகோ வீரமணி உள்ளிட்டோரும் கருணாநிதியின் பணிகளை பட்டியலிட்டு பேசினர்.

பின்னர் பேசிய, ஈஸ்வரன் எம்.ஜி.ஆரை திமுக பக்கம் இழுத்தது கருணாநிதியின் எழுத்து தான் என்று கூறினார். முதலமைச்சர் வெளிநாட்டில் இருக்கும் போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழா அவசர அவசரமாக நடைபெற்றதாகவும் முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக  ஆளுனர் விமர்சிப்பது கண்டிக்கதக்கது என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், கருணாநிதி பிறந்த நாளை மாநில சுயாட்சி நாள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் சனாதன சக்திகள் வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

பல நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு தமிழகம் உள்ளது என்றால் அதற்கு திமுக அரசு தான் காரணம் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்ட குடியரசுத் தலைவரை வைத்து கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு  வரவேற்கதக்கது என முத்தரசன் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசினார். அப்போது சென்னை பல்கலைக் கழகத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்று இருவரும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக தமிழ்நாட்டில் 24 இடங்களில் கருணாநிதியின் சிலைகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளின் தொகுப்பான அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே என்ற புத்தகத்தை திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com