கோச்சடையான் தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை; உறுதி செய்த அமர்வு நீதிமன்றம்!

கோச்சடையான் தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை; உறுதி செய்த அமர்வு நீதிமன்றம்!
Published on
Updated on
1 min read

காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதிசெய்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு, 10 கோடியை அபிர் கொடுத்திருந்தார். திரைப்பட உரிமையை வேறு யாருக்கேனும் கைமாறும்பட்சத்தில்,  அந்த தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் உருவானது. 

அதன்படி அபிருக்கு கொடுக்க வேண்டிய தொகை 5 கோடி ரூபாய்க்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி முரளிமனோகர் வழங்கிய காசோலை, அவரது வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிவந்தது.

இந்த காசோலை மோசடி தொடர்பாக முரளிமனோகருக்கு எதிராக அபிர் சந்த் நாகர் மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், 5 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 7 கோடியே 70 லட்சம் ரூபாயை அபிர் சந்த் நாகருக்கு முரளி மனோகர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் தரப்பில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தஸ்னீம், கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம் அல்லிகுளம் நிர்ணயித்த தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com