ஓபிஎஸ் திமுகவின் பக்கம் பயணிப்பதாகவும், சப்பாத்தி, பரோட்டா சமைப்பவர்களே அமைச்சர்களாக உள்ளது வேதனையளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் அத்துமீறலில் ஈடுபடுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், ஜனநாயக விரோத செயல்களிலும் அத்துமீறல்களிலும் பணப்பட்டுவாடாவிலும் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும், திமுக ஜனநாயகம் ஏற்றுக்கொள்ள முடியாத செயலை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், செந்தில் பாலாஜி ஊழல் செல்வதில் கைபெற்றவர் என கூறிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையை செந்தில் பாலாஜி பெற்று தேர்தலுக்காக செலவு செய்து வருவதாகவும், செந்தில் பாலாஜி சாராய அமைச்சர் எனவும் விமர்சனம் செய்தார்.
ஓ.பி எஸ் திமுகவை நோக்கி பயணித்து வருவதாகவும்,ஓ.பி எஸ் ஆட்டக்களத்தில் இல்லை, நாக்கவுட் ஆனவர் எனவும் குறிப்பிட்டார்.
சப்பாத்தி, பரோட்டா, டீ , பஜ்ஜி, ஆம்லைட் போடுபவர்களே திமுகவின் அமைச்சர்களாக உள்ளனர் என்பது வேதனை அளிப்பதாக கூறிய அவர்,மக்கள் திமுக ஆட்சியை விரும்பவில்லை என்றும், தமிழகத்தில் கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை எனவும் தெரிவித்தார்.
கனிமொழி பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், ஆள் வைத்து கனிமொழி அடிப்பார்களா, இந்த மிரட்டலுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டோம் என்றும், பணநாயகத்தை விட ஜனநாயகத்தையே அதிமுகவினர் அதிகம் நம்புவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: மாநிலத் தலைவர் பதவிக்காக பாஜகவை தூக்கி பிடிக்கும் அண்ணாமலை!!