வழக்கறிஞர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கு; மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி! 

வழக்கறிஞர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கு; மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி! 
Published on
Updated on
1 min read

ஒரு வழக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டும்தான் ஆஜராக வேண்டும் என்று எப்படி உத்தரவிட முடியும் என மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டி.எம்.கே. ஃபைல்ஸ் தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியதால், ஜூலை 14ஆம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜரானபோது, நீதிமன்ற அறையில் அவரது சார்பில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற அறை மட்டுமல்லாமல் வளாகம் முழுவதும் பாஜக வழக்கறிஞர்களாலும், பத்திரிகை மற்றும் ஊடகத்தினராலும் நிரம்பி வழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நீதிமன்ற பணிகள், நீதிபதியின் பணி ஆகியவை பாதிக்கப்படுவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறி, கடந்த காலங்களில் உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும், எழும்பூர் நீதிமன்றத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலும் ஆஜரானபோது கூட்டம் குழுமியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இதுபோன்று விஐபி-கள் மற்றும் விவிஐபி-கள் ஆஜராகும் வழக்குகளில், அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு ஜூலை 17ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். தான் அனுப்பிய அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒரு வழக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள்தான் ஆஜராக வேண்டும் என்று எப்படி உத்தரவிட வேண்டும் என உத்தரவிட முடியும் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தொடர்பான இந்த வழக்கில் பார் கவுன்சிலை சேர்க்கவில்லை என சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து பார் கவுன்சிலை எதிர்மனுதாரராக இணைக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com