திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய சிறை நன்னடத்தை அதிகாரி - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய சிறை நன்னடத்தை அதிகாரி - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

காதலித்து ஏமாற்றம் 

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை மோசடி செய்த சிறை நன்னடத்தை அதிகாரி மற்றும் அவரது பெற்றோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குரூப் 1 தேர்விற்கான பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் திருச்சியை சேர்ந்த சத்தியமூர்த்தியும், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண்ணும் நண்பர்களாக பழக தொடங்கி, காதலித்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறிய சத்தியமூர்த்தி, பலமுறை உடலறவில் ஈடுபட்டுள்ளார்.

உறவுக்கார பெண்ணுடன் நிச்சயம்

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்தி சைதாப்பேட்டை சிறை நன்னடத்தை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், தங்கையின் திருமணம்,  பெற்றோர் சம்மதமின்மை போன்ற காரணங்களை கூறி அந்த பெண்ணை திருமணம் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். பின்னர் உறவுக்கார பெண்ணுடன் நிச்சயமாகிவிட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்,  சத்தியமூர்த்தியின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.

சாதி பெயர் சொல்லி திட்டிய பெற்றோர்

இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தியின் பெற்றோர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சாதி பெயரை சொல்லி அந்த பெண்ணையும், அவரது தாயை திட்டியதோடு, மகன் ஏமாற்றியதற்காக பணம் கொடுப்பதாக கூறி மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை - குமரன் நகர்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி வாதிட்டார்.அதன்பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறை நன்னடத்தை அதிகாரி சத்தியமூர்த்தி, அவரது தந்தை ரெங்கு, தாய் சாரதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். சத்தியமூர்த்திக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெற்றோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com