பாரம்பரிய சின்னம் கோரிக்கை:
தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் ராமேஸ்வரம் கடலின் அருகே அமைந்துள்ள ராமர் சேது பாலமானது ஆடம்ஸ் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாலம் இலங்கை செல்வதற்காக ராமரால் கட்டப்பட்டது என்று புராணத்துடனான மத நம்பிக்கை உள்ளது.
ராவணன் சீதையைக் கடத்தி இலங்கைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு செல்வதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது என புராணக் கதைகள் கூறுகின்றன. அதன் எச்சங்கள் இன்றும் அங்கே காணப்படுவதாக மக்களால் நம்பப்படுகிறது.
தடை விதித்த உச்ச நீதிமன்றம்:
பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
சேது சமுத்திரம் திட்டத்திற்கு முற்று வைக்கும் விதமாக ராமர் பாலத்தை பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வழக்கு தொடர்ந்தார். 2007-ல் ராமர் சேது திட்டத்துக்கான பணிகளுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
மத்திய அரசின் கோரிக்கை:
இந்தத் திட்டத்தின் "சமூக-பொருளாதார பாதகத்தை" கருத்தில் கொண்டதாகவும், ராமர் சேதுவை சேதப்படுத்தாமல் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு வேறு பாதையை ஆராயத் தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அப்போது உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இந்து அமைப்புகளும் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஒத்தி வைத்த நீதிமன்றம்:
இது தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
-நப்பசலையார்