"காவேரி விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை" கர்நாடக அமைச்சர் பேட்டி!

Published on
Updated on
1 min read

காவேரி விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கர்நாடக சிறு தொழில்கள் துறை அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபூர் தெரிவித்துள்ளார்.  

கர்நாடக மாநில கைவினை பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவேரி‌ - கர்நாடக மாநில கலை மற்றும் கைவினை பொருள்கள் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் கர்நாடக அரசின் சிறு தொழில்கள், பொது நிறுவனங்கள் துறை அமைச்சர்  சரணபசப்பா தர்ஷனபுர ஆகியோர் கலந்து கொண்டு புதிய கடையை  தொடங்கி வைத்தனர். இதையடுத்து கர்நாடக அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபூர்  செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசியவர், கர்நாடகத்தில் மழை இல்லாதது தான் காவேரி பிரச்சனைக்கு காரணம் எனவும் இரண்டு மாநிலங்களுக்குமே தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். குறிப்பாக கர்நாடகாவில் 19 மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கும் காவேரி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினார். மேலும், கடந்த ஆண்டு மழை இருந்தது, தண்ணீர் பிரச்சனை இல்லை இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை இல்லாதது தான்  பாதிப்புக்கு காரணம் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசியவர், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இரு மாநிலங்களும் அணுகி உள்ளோம், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம் என்றார். காவேரி பிரச்சனை தொடர்பாக இரு மாநில அரசுகள் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார். 

காவேரி பிரச்சினை குறித்து இரண்டு மாநிலங்களுடன் பேச வேண்டியதும், தீர்க்க வேண்டியதும் மத்திய அரசின் கடமை எனவும், அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். அந்த பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்றார். 

இதைத்தொடர்ந்து பேட்டியளித்த தமிழக சிறு தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், காவிரி பிரச்சனை தொடர்பாக இரு மாநில அமைச்சர்கள் பேச வேண்டியது இல்லை, இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com