ஈபிஎஸ் என்ன வேண்டுமானாலும் பேசுவார்...இதுக்காக தான் ஆளுநருடனான சந்திப்பு...அமைச்சர் கொடுத்த பகீர்!

ஈபிஎஸ் என்ன வேண்டுமானாலும் பேசுவார்...இதுக்காக தான் ஆளுநருடனான சந்திப்பு...அமைச்சர் கொடுத்த பகீர்!
Published on
Updated on
1 min read

அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்னைகளுக்காகத்தான் ஆளுநரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

ஆளுநரை சந்தித்த எடப்பாடி:

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடிபிடித்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பானது அரசியல் தளத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது.

மனு அளித்த எடப்பாடி பழனிசாமி:

தமிழக ஆளுநரை எடப்பாடி சந்தித்த போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, போதை கலாசாரம் அதிகரித்துள்ளது, பல துறைகளிலும் முறைகேடுகள் அதிகரித்துள்ளன உள்ளிட்ட புகார்கள் அடங்கிய மனுவை ரவியிடன் ஈபிஎஸ் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஈபிஎஸ்:

ஆளுநருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், தமிழகத்தில் மாணவர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து, தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது எனவும், அனைத்து துறைகளில் லஞ்சம் நடைபெறுகிறது எனவும், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை மாநில அரசு பறிக்கும் வகையில் செயல்படுகிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

பொய்களின் மொத்த உருவம்:

ஆளுநருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழக அரசு குறித்து பேசிய ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்தார். அதில், எடப்பாடி பழனிசாமி பொய்களின் மொத்த உருவமாக, தவறான கோரிக்கை மனுவை ஆளுநரிடம் அளித்து இருப்பதாகவும், அதிமுகவில் அதிகாரப்போட்டி வலுவடைந்து வரும் நிலையில், எடப்பாடி தனக்கு சாதகமான நிலையை உருவாக்குவதற்காகவே, ஆளுநரை சந்தித்து முறையிட்டாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக விமர்சித்திருந்தார்.

எல்லாம் உட்கட்சி பிரச்சனைக்காக தான்:

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வேம்பியில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் அரசு நலத்திட்டங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டுமானாலும் பேசுவார், ஏனென்றால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறிய இவரெல்லாம், ஆளுநரை பார்த்தது முக்கியமானதா என்று விமர்சித்தார். ஈபிஎஸ் ஆளுநரை பார்த்தது கட்சி பிரச்சனைக்காகத்தான் என்று கூறிய அவர், ஆளுநரிடம் இதை சொல்லி அதன்மூலமாக உள்துறை அமைச்சரிடம் கூறி உட்கட்சி பூசலை சரி செய்ய முடியுமா என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அங்கு சென்றால் அரசியல் பேசவேண்டுமே என்பதற்காக இதையெல்லாம் பேசியிருப்பதாக” விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com