ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டது....!!!

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டது....!!!
Published on
Updated on
1 min read

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம், பேருந்து வாசல்களில் கதவுகள் பொருத்தி இருந்தால் மாணவனின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும் தெரிவித்துள்ளது.

சென்னை செஷனாய் நகரை சேர்ந்த சசிகுமார் மற்றும் ஷீலாராணி தம்பதியின் 14 வயதான மகன் ஆகாஷ் சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்த நிலையில், 2015 ஜூலை மாதம் மாநகர பேருந்தில் பயணித்துள்ளார்.  அழகப்பா நகர் நிறுத்ததில் இருந்து, பேருந்து புறப்பட்டபோது கீழே இறங்க முயற்சித்த ஆகாஷ், நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார்.

மகனின் இறப்புக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிடக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் ஆகாஷின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டீ.சந்திரசேகரன் விசாரித்தார்.  அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், அகாசின் மரணத்திற்கு இழப்பீடாக 10 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ததுடன், உயிரிழந்த ஆகாசின் கவனக்குறைவிற்காக 50 சதவீத இழப்பீடு தொகையை கழித்தது போக, 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை ஆகாசின் பெற்றோருக்கு வழங்க வேண்டுமென மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவரது உத்தரவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கவனக்குறைவாக ஏறி இறங்குவதால் இதுபோன்ற மரணங்கள் நிகழ்வதாகவும், மாநகர பேருந்தில் வாசற் கதவுகள் பொருத்தப்பட்டிருந்தால், இந்த மரணம் தடுக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். பள்ளி மாணவர்கள் மத்தியில் ஓடும் பேருந்தில் ஏறி, இறங்குவது பேஷனாக உள்ளதாகவும்,  அப்படிப்பட்ட மாணவர்களை ஓட்டுநர், நடத்துனர், பொதுமக்கள் எச்சரித்தாலும், இதுபோன்ற மரணங்கள் தொடர்வதாக நீதிபதி சந்திரசேகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com