உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்படுமா அமலாக்கதுறை!!!!!

உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்படுமா அமலாக்கதுறை!!!!!
Published on
Updated on
2 min read

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் அமலாக்கத்துறையின் கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட முக்கியமான சட்டபிரிவுகளை உறுதியப்படுத்திய  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது இன்று மதியம் 1.20 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா அறையில் விசாரணை நடைபெற உள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையின் அதிகாரத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்த உடனேயே உடனடியாக சோதனைகளை செய்வது உடனடியாக கைது ஜாமின் வழங்குவதற்கு கொடுக்கப்படும் கடுமையான நிபந்தனைகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே சொத்துக்களை பறிமுதல் செய்வது வழக்கு தொடர்பான விவரங்களை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வது, மேற்பார்வை இடுவதற்கான குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதகமான விஷயங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டம் பிரிவு 50 ல் அமலாக்கத் துறையை சேர்ந்த அதிகாரிகள் எந்த ஒரு நபருக்கும் சம்மன் வழங்கவும் ஆவணங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது இது பல தருணங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.அமலாக்கத் துறையின் இந்த சட்ட விதிமுறைகள் ஒரு குடிமகனுக்கு அரசியல் சாசன பிரிவு 20 21 ஆகியவை வழங்கிய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி டி ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூலை 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் அமலாக்கத்துறை சொத்துகளை முடக்க அதிகாரம் வழங்கும் பிரிவு 5 ஐ உறுதி செய்தது . அமலாக்கத்துறை சொத்துகளை முடக்க அதிகாரம் வழங்கும் மற்ற பிரிவான பிரிவு 8 (4) உம் உறுதிப்படுத்தப்பட்டது. வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யவும், லாக்கர் உள்ளிட்டவற்றை உடைத்து ஆவணங்களை கைப்பற்றவும் அதிகாரம் வழங்கும் பிரிவு 17(1) , 18(1) உள்ளிட்டவையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக கைது செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவு 19, சிறப்பு நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும் குற்றங்கள் என வகைப்படுத்தும் பிரிவு 44, ஜாமீன் வழங்க மறுக்கும் சட்டப்பிரிவு45, உள்ளிட்டவையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை கட்டாயம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்பது அவசியம் அல்ல என கூறியுள்ள நீதிமன்றம் கைதிற்கான காரணத்தை தெரிவித்தால் மட்டும் போதும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணை எடுக்க கோரி தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார். 

இதனடிப்படையில் இன்று மதியம் 1.20 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா அறையில் 3 நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com