ஹேக்கிங் மற்றும் இணைய குற்றங்களில் AI பயன்படுத்தப்படுகிறதா?

ஹேக்கிங் மற்றும் இணைய குற்றங்களில் AI பயன்படுத்தப்படுகிறதா?

Published on

தீங்கிழைக்கும் மென்பொருள் (Malicious softwares), இணைய மோசடிகளில் ஈடுபட உதவும் நம்பகத்தன்மையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் இணையத்தில் தவறான தகவல்களை பரப்புவது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுவதற்காக, ஹேக்கர்ஸ், தற்போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த பதிவில்.

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) ஆரம்ப கால கட்டம் பேசுமளவில் இல்லையென்றாலும், சிறு சிறு வேளைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால், தற்போது செயற்கை நுண்ணறிவால் பல செயல்களில் ஈடுபட முடியும். 

நாளைடைவில், உலக மக்கள், தங்களது அன்றாட வாழ்க்கையில், செயற்கை நுண்ணறிவுடன் ஒத்து வாழத் தொடங்கிவிட்டார்கள் என்று கூறலாம். OpenAI மற்றும் ChatGPT போன்ற புதுவரவுகளே, செயற்கை நுண்ணறிவின் ஒரு புதிய சகாப்தத்திற்கு தொடக்கப்புள்ளி என்றும் கூறலாம். 

பணியில் சேர்வதற்கு முன் Resume எழுதுவதற்கும், பணியில் சேரும் பொழுது நேர்காணலுக்கு தயாராகுவதற்கும், சமையல் குறிப்பு, காதலுக்கு அறிவுரைகள், மாணவர்களுக்கு சிக்கலான பகுதிகளை விளக்குவதற்கு போன்ற அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் பயன்பாடு என்பது கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இது குறித்து கனடா சைபர் அதிகாரி சமி க்ஹவுரி, பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் நேர்காணலில் கூறுகையில், தனது நிறுவனதிற்கு ஒரு போலியான மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தி குறிப்பு வந்திருந்தாகவும், ஆனால் அதில் கேட்கப்பட்டிருந்த விவரங்கள் மற்றும் ஆதாரங்கள் எதுவும் தான் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதன் பின்னணி என்னவென்றால், அந்த மின்னஞ்சல் முகவரி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான முகவரி என்பதே.

அதே போல், சமீபத்தில் சைபர் கண்காணிப்பு குழுக்கள், AI யின் பங்களிப்பை அணைத்து செயல்பாடுகளிலும் காணமுடிகிறது என தெரிவித்திருந்தன. அதாவது, AI யை பயன்படுத்தி செயற்கையான உரையாடல்கள், ஆவணங்கள் மற்றும் பல எண்ணற்ற செயல்களை நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும்.

பொதுவாக AI யின் பின்னணியில் இருக்கும் அல்கோரிதங்களில் LLM (Large Language Model) எனப்படும் அல்கேரிதம் முக்கியமானதாகும். அதாவது, எங்கெல்லாம் AI செயல்பாட்டில் இருக்கிறதோ, அங்கு புதிய உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளவது, உருவாக்குவது  மற்றும் கணிப்பது போன்றவற்றை LLM மேற்கொள்ளும். இதனை அடிப்படையாக வைத்தே, AI யால், தனது பயனர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. 

சமீபத்தில், ஐரோப்பிய போலீசாரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுவாக AI ஆங்கிலத்தில் நேர்த்தியான புரிதல் மற்றும் யதார்த்ததுடன் செயல்பட முடியும் என்பதால், அதனை ஹேக்கர்ஸ் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இணையத்தில் ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர்.

தற்போதைய கால கட்டத்தில், AI யை வைத்து செயல்படுத்தப்படும் இணைய தாக்குதல்களை மனிதர்களால் சமாளிக்க முடிந்தாலும், வரும் காலங்களில், நம் கற்பனைக்கு எட்டாத இணைய வழி தாக்குதல்களை LLM ஆல் நிகழ்த்த முடியும் என யூகிக்கப்படுகிறது. ஏனென்றால் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதே காரணம்.

- வே. ஆனந் பாபு

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com