நம்பி வந்தால் உயிர் கொடுக்கும் மதுரையில் நண்பர்களை ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் வரை கடன்: மாஸ்டர் பிளான் செய்த கணவன் மனைவி தலைமறைவு

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (28) என்பவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் விற்பனை கடையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே கடையில் பணியாற்றி வந்த ஶ்ரீராம் என்பவரிடம், 'தான் பெற்றோரை மீறி சமீபத்தில் காதல் திருமணம் செய்துள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடியில் தவிப்பதாகவும், தனக்கு 5 லட்சம் ரூபாய் கடன் ஏற்பாடு செய்து தருமாறும்' கேட்டுள்ளார். பின்னர், அவரது மனைவி யுவலெட்சுமியையும் அழைத்து வந்து நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்து கடன் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.
அதனை நம்பிய ஶ்ரீராம், அவருடைய சம்பள சான்றிதழை வைத்து Paytm மூலம் தனி நபர் கடனாக 3 லட்சம் ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளார். பின்னரும் அவர்கள் பணம் கேட்டதால், அவரிடமிருந்த 1 லட்சம் ரூபாயையும் கடனாக கொடுத்துள்ளார். அவரிடம் வாங்கிய கடனுக்கு 3 மாதங்கள் மட்டும் வட்டி கட்டிய நிலையில், கடந்த டிசம்பரில் தனக்கு உடல்நலமில்லை என விடுப்பு எடுத்த சந்தோஷ், சில நாட்களில் அலைபேசியை அணைத்து விட்டு கணவனும் மனைவியும் தலைமறைவாகி உள்ளனர்.
மேலும் படிக்க | இறந்த மனைவியே அந்திராவிலிருந்து ஒடிசாவுக்கு தோளில் சுமந்து சென்ற காதல் கணவன்
அதன் பின்னர் போலீசில் புகாரளிக்க நடவடிக்கை எடுத்த போது தான், சந்தோஷ் இதே போல அவரது கடையில் பணியாற்றிய முகமது பிலால் என்பவரிடம் 2 லட்சமும், வீரவினோத் என்பவரிடம் 1.18 லட்சமும் கடன் பெற்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. மேலும், வினோத் என்பவரை ஏமாற்றி 5 லட்சம் பணமும், அவரின் நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்து 8.15 லட்சமும் பெற்றுள்ளார்.
இதே பாணியில் நண்பர்கள் 8 பேரிடம் மொத்தமாக சுமார் 30 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி விட்டு சந்தோஷ் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகி விட்டதாக ஶ்ரீராம் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.