டி.என்.பி.எஸ்.சிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...செயல்படுத்துமா டி.என்.பி.எஸ்.சி?!!

டி.என்.பி.எஸ்.சிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...செயல்படுத்துமா டி.என்.பி.எஸ்.சி?!!

மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் பி.டெக்., மீன்வளம் என்ஜினீயரிங் படித்தவர் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

படித்தும் விண்ணப்பிக்க முடியவில்லை:

சென்னை, உயர்நீதிமன்றத்தில்  நாகை மாவட்டத்தை சேர்ந்த, ஆர்.எஸ்.கீதப்பிரியா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  கடந்த அக்டோபர் 13 ந்தேதி மீன்வளத்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை சேர்க்கவில்லை. 

மாறாக விலங்கியல், மீன்வள அறிவியல் இளங்கலை, மீன்வளம தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளை மட்டும் சேர்த்துள்ளனர். இதனால், இந்த பதவிக்கு என்னை போல பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை முடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 

ரத்து செய்ய மறுத்த நீதிபதி:

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அறிவிப்பை ரத்து செய்ய மறுத்து விட்டார். ஆனால், இந்த வழக்கிற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். அதேநேரம், உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு இந்த வழக்கின் தீர்ப்பின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டார்.

விடாது போராடிய பிரியா:

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை  கீதப்பிரியா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை மீன்வளத்துறை உதவி ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பதவிக்கு நடத்தப்படும் தேர்வில் சேர்க்க வேண்டும் என்று நானும், என் தந்தையும் 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம்.  

நாகை மாவட்டத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வள பல்கலைக்கழகமும் இதே கோரிக்கையுடன் மனுவை 2017 ஆம் ஆண்டு முதல் பல முறை அனுப்பியும் பரிசீலிக்கவில்லை. மாறாக அரசை அணுகும்படி பதில் அளித்துள்ளது. எனவே, உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் பி.டெக்., மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை சேர்க்க உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தார்.

இடைக்கால நீதி:

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரும், அவரது தந்தையும்,  பல்கலைக்கழகமும் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் டி.என்.பி.எஸ்.சி., பரிசீலிக்க வில்லை. எனவே, உதவி ஆய்வாளர் தேர்வுக்கு மனுதாரரை விண்ணபிக்க அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை....காங்கிரஸ் அதிருப்தி!!!