தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை....!!!

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை....!!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.  கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் நல்ல மழை பெய்தது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாயினர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மிதமான மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  கோடை சீசன் தொடங்கி உள்ளதை அடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், மாலைமுதல் மிதமான மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள், பிரையன்ட் பூங்காவில் மழையில் நனைந்தபடி பூக்களை ரசித்து மகிழ்ந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.  இந்நிலையில், திடீரென பெய்த கோடை மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால் பள்ளிக் கூடங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் அதிகப்படியான நீர் தேங்கியது.  இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.  

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குற்றாலம், ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது.  கிள்ளியூர் என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளையராஜா என்ற விவசாயி மீது இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com