வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு...

அரசுக்கு 8.1/2 ஏக்கர் நிலத்தை கொடுத்து விட்டு இழப்பீடு தொகை கொடுக்காததால் இரண்டாவது முறையாக அரூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு...

தருமபுரி : அரூர் அடுத்த சட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 85 வயதான மாரக்கவுண்டர். இவருக்கு சொந்தமான 8.1/2 ஏக்கர் நிலத்தை கடந்த 2001-ல் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க கையகப்படுத்தினார். இந்த நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததால் மாரக்கவுண்டர் கடந்த 2004 ம் ஆண்டு தருமபுரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்பு 2008 ம் ஆண்டு, அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2012 -ல் மாரக்கவுண்டருக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டு தொகை வழங்காததால் கடந்த 2015-ல் மாரக்கவுண்டர் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க | மியான்மரில் சிக்கித்தவித்த நபர்கள்...! தாயகம் மீட்பு..! வரவேற்ற அமைச்சர்..!

இதையடுத்து கடந்த செப்டம்பரில் அசல் வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 94 ஆயிரத்து 767 ரூபாய் வழங்க வேண்டும் தவறும் பட்சத்தில் தாசில்தார் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய நீதிபதி முகமது அன்சாரி உத்தரவிட்டார். 

அதன் அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்காததால் கடந்த ஆகஸ்ட் மாதம் அரூர் ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கைக்கு சென்றபோது ஒரு வாரத்தில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதியளித்ததை அடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் அதன்பின் இழப்பீடு வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க | ”மருத்துவ வசதி இல்லாத 20 கிராமங்கள் - சிகிச்சையின்றி தவிக்கும் மக்கள்”

இதையடுத்து இன்று மாரக்கவுண்டர், வக்கீல் ராஜா மற்றும் சார்பு நீதிமன்ற அமீனா சேகர் ஆகியோர் அரூர் ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சேர், டேபிள், கம்ப்யூட்டர் மற்றும் பீரோ உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.

இது பற்றி மாரக்கவுண்டரிடம் கேட்கும் போது :

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 8.1/2 ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திற்காக கொடுத்துவிட்டு இழப்பீடு ஏதும் வராததால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும், அந்த நிலம் தற்போது இருந்திருந்தால் அதில் விவசாயம் செய்து எங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி கொண்டு இருப்பேன் என்றும், தற்போது அங்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை போவதாகவும் கூறினார். மேலும் இது இரண்டாவது முறையாக ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் உடனடியாக எங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை அரசு வழங்க வேண்டும்

என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க | சத்துமாவு கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை கோரி வழக்கு...! தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...!