குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய சிபிஐ காவல்துறைக்கு மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
வருமான வரித்துறை சோதனை:
தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அறிக்கை அடிப்படையில்:
வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர அனுமதி:
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, வணிக வரித் துறை துணை ஆணையர் வி.எஸ்.குறிஞ்சிசெல்வன், துணை வணிக வரி அதிகாரி எஸ்.கணேசன், முன்னாள் அனைச்சர் சி.விஜய்பாஸ்கர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லட்சுமி நாராயணன், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பி.முருகன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், புழல் சரக காவல் உதவி ஆணையர் ஆர்.மன்னர் மன்னன், செங்குன்றம் ஆய்வாளர் வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் உறுப்பினரும், சுகாதார குழு தலைவருமான ஏ.பழனி ஆகியோரில், ஐ.பி.எஸ். அதிகாரிகளான எஸ்.ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் தவிர மற்றவர்கள் மீது வழக்கு தொடர கடந்த ஆண்டு (2022) ஜூலை 19ஆம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கியது.
குற்றப்பத்திரிக்கை:
இதனையடுத்து சிபிஐ காவல்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2வது வாரம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சாட்சியங்கள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைத்து, குறைகளை நிவர்த்தி செய்து புதிதாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பிழைகளில் திருத்தம்:
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தும் பணிகள் இன்னும் நிறைவடையாததால், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதி, சிபிஐ-க்கு கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிக்க: எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற கம்பன் திருவிழா.....