குஜராத் தேர்தல்... வெற்றி வாய்ப்பு யாருக்கு?

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
குஜராத் தேர்தல்:
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 63.75 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்நிலையில், மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்கு பகுதியில் உள்ள தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் மொத்தம் 2.54 கோடி பேர் வாக்களிக்க ஏதுவாக 14 ஆயிரத்து 975 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5:30 மணிக்கு நிறைவடைகிறது.
மும்முனை போட்டி:
27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இழந்த ஆட்சியை பிடிக்க புதிய தலைவருடன் களத்தில் பல கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் இடங்களை கைப்பற்றும் நோக்கில் உள்ளது காங்கிரஸ். டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி இந்த் முறை குஜராதை கைப்பற்றும் நோக்கில் பல தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறை குஜராத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதையும் படிக்க: சும்மா தான்யா சொன்னேன்...மோடி குறித்த கருத்தில் பின் வாங்கிய கார்கே!!!
பிரதமர் வாக்களிப்பு:
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் சனிக்கிழமை பிரச்சாரம் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் தொகுதியில் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பள்ளியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத்தில் உள்ள நரன்புரா பகுதியிலும் வாக்களிக்க உள்ளனர்.
இதனிடையே, இரண்டு கட்டங்களாக நடைபெற்றும் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.