பொதுச்செயலாளரான எடப்பாடி... இனிப்பு வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!!

பொதுச்செயலாளரான எடப்பாடி... இனிப்பு வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!!

பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார்.  மாநகராட்சி பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தென் சென்னைக்கு நிகராக வட சென்னையை மாற்றும் பணி 8 கால் வேகத்தில் நடைபெறும்.

அயனாவரம் சோலை அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை அமைச்சர் சேகர்பாபு, வெற்றி அழகன்  எம்.எல்.ஏ உள்ளிட்டோர்  திறந்து வைத்தனர்.  ரூபாய் 75.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்கள், நடைமேடைகள், அமரும் கல் நாற்காலி தேகப் பயிற்சி மேற்கொள்ளும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பூங்காவை திறந்து வைத்த பின்னர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், 

அனைத்து மாநகராட்சி பூங்காக்களையும் அழகுப்படுத்தும் நோக்கில் இன்றைய அரசு செயல்பட்டு வருவதாகவும், பூங்காக்களில் நடைபாதை விளையாட்டு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் அனைத்து பயன்பாடுகளும் உடைய இது போன்ற பூங்காக்கள் அமைவது மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார் என்றும் தென் சென்னைக்கு ஈடாக வட சென்னையை மாற்றும் பணியில் முழுவீச்சில் எட்டு கால் பாய்ச்சலில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கழிவுநீர், சாலை வசதி, போக்குவரத்து நெரிசல் உட்பட அடிப்படை வசதிகள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், கொரோனா தொற்று மழை வெள்ளம் போன்ற காரணத்தினால் பணிகள் தாமதம் ஆகியிருக்கிறது விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளரானதைக் குறித்த கேள்விக்கு முதலில் எவ்வித பதிலும் அளிக்காமல் சென்ற அமைச்சர் சேகர் பாபு திரும்பி வந்து அது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு லட்டு கொடுத்து சென்றார்.  அமைச்சரின் இச்செயல் அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க:   சட்டப்பேரவையில் இன்று....!!