கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் விளையாட்டின் புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், "தேசிய கல்விக் கொள்கையானது விளையாட்டை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள முன்மொழிந்துள்ளது, மேலும் நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தின் கட்டுமானம் இந்த காரணத்தை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, கேலோ இந்தியா திட்டம் மூலம் விளையாட்டு வீரர்களின் பல கால பிரச்னைகளை அரசு தீர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், வீரர்களின் நலனுக்காக பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிதியுதவி வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது என்றும், இதுவரை விளையாட்டுத் துறையில் இருந்து எழுப்பப்பட்டு வரும் மோசடிகள், பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட புகார்கள் உடனே தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா பல்கலைக்கழகம் மூலம் விளையாட்டுப் போட்டிகள் குழு உணர்வை வளர்க்க உதவுவதோடு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களிடையே கலாச்சார பரிமாற்றம் இருக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.