ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் உலக தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்களுக்கு சிறப்பு விருந்தளித்தார்.
ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி நடைபெற்ற சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர். . டெல்லி பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான அறையில் சிறப்பு இரவு விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் முன்னாள் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட 170 முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நாட்டின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான சைவ உணவுகள் விருந்தில் இடம்பெற்றன. விருந்தினர்களுக்கு சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் மும்பையில் பிரபலமான பாவ் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன. விருந்தின் போது 60-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்ற இசைக்கச்சேரி நடைபெற்றது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜியா, மொரீஷியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்துக் கொண்டனர்.