தஞ்சாவூரில் சைக்கிள் ஓட்டி வந்த 50 பேருக்கு போக்குவரத்து காவல்துறையினர் தக்காளியை வழங்கி பாராட்டினர்.
சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கவும், மோட்டார் வாகனங்களால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தனியார் அறக்கட்டளை சார்பில் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் கீழ் மேம்பாலம் பகுதியில் சைக்கிள் ஓட்டி வந்த 50 பேருக்கு போக்குவரத்து ஆய்வாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் தக்காளியை இலவசமாக வழங்கினார்.
இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில், கடந்த காலங்களில் சைக்கிள் பயன்பாடு இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இல்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போது மோட்டார் சைக்கிள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு அதிக அளவில் உள்ளது. விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகிறது. குறிப்பாக சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
எனவே, சிறு சிறு வேலைகளுக்கு அனைவரும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும், மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் ஓட்டி வந்தவர்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக அறக்கட்டளையின் நிர்வாகி தெரிவித்தார்.