உலகை விட்டுச் சென்றார் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்!!!

உலகை விட்டுச் சென்றார் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்  பர்வேஸ் முஷாரப்!!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்.  ஆதாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

நீண்டநாள் சிகிச்சை:

முஷாரப் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவர் தனது 79வது வயதில் இறுதி மூச்சை விட்டார்.  முஷாரப் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்வேஸ் முஷாரப்:

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும் ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷாரப் ஆகஸ்ட் 11, 1943 அன்று டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் பிறந்தார்.  1947ல் இந்தியா பிரிவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது முழு குடும்பமும் பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தது.  இவரது தந்தை பாகிஸ்தான் அரசில் பணிபுரிந்தவராவார்.

ஜெனரல் பர்வேஸ் முஷாரப்:

1998 ஆம் ஆண்டில் பர்வேஸ் முஷாரப் ஜெனரலாக ஆனார்.  இவரது தலைமையில் இந்தியாவுக்கு எதிராக கார்கில் போருக்கு சதி செய்தார்கள்.  ஆனால் இந்தியாவின் துணிச்சலான வீரர்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் முறியடித்தனர்.  'இன் தி லைன் ஆஃப் ஃபயர் - எ மெமோயர்' என்ற தனது வாழ்க்கை வரலாற்றில், ஜெனரல் முஷாரப், கார்கிலைக் கைப்பற்றுவேன் என்று சபதம் செய்ததாகவும் ஆனால் நவாஸ் ஷெரீப் காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் எழுதியுள்ளார்.

முஷாரப் மீது தேசத்துரோக குற்றம்:

1999 முதல் 2008 வரை பாகிஸ்தானை ஆட்சி செய்த ஜெனரல் முஷாரப், தேசத்துரோக குற்றச்சாட்டிற்கு ஆளாகி, அரசியலமைப்பை இடைநிறுத்தியதற்காக 2019 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.  2020 ஆம் ஆண்டில், லாகூர் உயர் நீதிமன்றம் முஷாரப்பிற்கு எதிராக நவாஸ் ஷெரீப் அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்தது.

சர்வாதிகாரியான முஷாரப்:

1998ல், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், பர்வேஸ் முஷாரப்பை ராணுவத் தளபதியாக்கினார்.  ஆனால் ஒரு வருடம் கழித்து 1999 இல், ஜெனரல் முஷாரப் நவாஸ் ஷெரீப்பை தூக்கி எறிந்து பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக ஆனார்.  அவர் ஆட்சிக்கு வந்தவுடன், நவாஸ் ஷெரீப் அவரது குடும்பத்தினருடன் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  நானே உன் மகன்.... தைப்பூச தீர்த்தவாரி.... வரலாறு!!