தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மீண்டும் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று அதன் நிரவாகிகள் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் பேசுகையில், "திரையரங்கங்களில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு 12 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும் ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்படுகின்றது. இவற்றுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசால் 8 விழுக்காடு வரி Local body tax (( உள்ளாட்சி வரி)) எனும் பெயரில் விதிக்கப்படுகின்றது . கடந்த ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த 8 விழுக்காடு வரியை நீக்க வேண்டுமென தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்த 8 விழுக்காடு வரி குறைக்கப்பட்டால் டிக்கெட் விலையும் 100 ரூபாய்க்கு 8 ரூபாய் குறையும் என தெரிவித்தனர். மேலும் திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாட்டில் முன்பு 4000 திரையரங்குகள் இருந்த நிலையில் தற்போது ஆயிரம் திரையரங்கங்களாக குறைந்துவிட்டது எனக்கூறிய அவர்கள், ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட திரையரங்குகளில் கூட தற்போது 100, 150 பார்வையாளர்கள்தான் வருகின்றனர் எனவும் தெரிவித்தனர். எனவே ஒரேயொரு திரையுடன் உள்ள பெரிய திரையரங்கத்தை, நான்கு திரைகள்வரை கொண்ட திரையரங்கமாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும், இவ்வாறு ஒரு திரையை 3, 4 திரைகளாக மாற்றினால் சிறு பட்ஜெட் படங்களை திரையிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும், வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டதையும் பிறகு வந்த ஆட்சியில் அது நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினர். எனவே தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம் , வரிச்தலுகையை மீண்டும் வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.