தென்காசியில், செய்தியாளர்கள் என்ற பெயரில் கல்குவாரியில் பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அரியூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல் குவாரியில் சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த பொது போது அந்தப் பகுதியில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், சட்ட விரோதமாக தனி நபருக்கு சொந்தமான இடத்தில் புகுந்ததாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 13 பேர் மீது புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த தனியார் கல்குவாரிக்கு காரில் வந்த மூன்று நபர்கள் தங்களை செய்தியாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கல்குவாரியில் முறைகேடு நடப்பதாக கூறி, அதனை தனது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அப்பொழுது, அங்கு பணியில் இருந்த வேலையாட்கள், இங்கு வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனக்கூறி பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக சங்கரன்கோவில் போலீசாருக்கு முதலில் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் படி விரைந்து சென்ற சங்கரன்கோவில் போலீசார், கல்குவாரிக்குள் நுழைந்த மூன்று நபர்களை விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
மேலும், அரியூர் கிராமம் புளியங்குடி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதி என்பதால், புளியங்குடி போலீசாருக்கு, சங்கரன்கோவில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே, புளியங்குடி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து செய்தியாளர்கள் என்று கூறிக்கொண்டு கல்குவாரிக்கு சென்று வீடியோ எடுத்த 3 நபர்களையும் புளியங்குடி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, அவர்கள் மூவரும் மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார், பிரபு, சவுந்தர பாண்டியன் என்பதும், அவர்களில் வினோத்குமார் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றின் போலி அடையாள அட்டை வைத்திருப்பதும், பிரபு ஆதவன் செய்தி நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டை வைத்திருப்பதும் தெரியவந்தது.
மேலும், மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் சௌந்தர பாண்டியன் போலியாக ஒரு அடையாள அட்டை தயாரித்து அதை வைத்து கல் குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் உள்ளே புகுந்ததும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: தொடங்கியது ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி!