பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி பட்ட படிப்பு சான்றிதழ்!!
சூலூர் அருகே பாரதியார் பல்கலை பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய படிப்புக்கு போலியாக பட்ட சான்றிதழ் வழங்கியதாக மாணவி ஒருவரின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் மகி கலாசேத்ரா என்ற பெயரில் பரதநாட்டிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாண்டுகள் டிப்ளமோ, இளங்கலை மற்றும் இரண்டு ஆண்டுகள் முதுகலை பரதநாட்டிய பட்டய படிப்புகள், பாரதியார் பல்கலை அங்கீகாரத்துடன் நடத்தப்படுவதாக நாட்டிய பள்ளி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதனை நம்பி பலர் இந்த பரதநாட்டிய பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் கோவை கணியூரை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகளும் இங்கு நாட்டியத்தில் டிப்ளமோ முடித்த நிலையில் அரங்கேற்றம் செய்ய நாட்டிய பள்ளி நிர்வாகம் 3 லட்ச ரூபாய் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நாட்டியப் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து மாணவியின் தந்தை சக்திவேல் பேசுகையில், பரதநாட்டியத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக எனது மகளை இந்த பள்ளியில் சேர்த்தேன். பட்ட படிப்பு என்ற பெயரில் 3 செமஸ்டர் தேர்வுகள் நடத்தி, பாரதியார் பல்கலைக்கழக பெயருடன் சான்றிதழ்கள் கொடுத்திருக்கின்றனர். இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகத்தை அணுகி கேட்டபோது, 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது போன்ற பட்ட படிப்புகளுக்கு பாரதியார் பல்கலை சார்பில் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தனர், எனக் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து நாட்டிய பள்ளி நிர்வாகத்திடம் அவர் கேட்டபோது, அவர்கள் எந்த விதம் முறையான பதிலும் தெரிவிக்கவில்லை எனவும், அரங்கேற்றத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போதும் அதை கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது மகளுக்கு நீதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மாணவியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.