" அமைச்சர் பொன்முடி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்" - அண்ணாமலை.

" அமைச்சர் பொன்முடி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்" - அண்ணாமலை.
Published on
Updated on
3 min read

கோவை விமான நிலையத்தில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 

" வருகிற  28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி,  ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் எல்லாம் அதனை எடுத்துச் சென்று மான்பேட்டனிடம் கொடுத்து திரும்ப வாங்கி மீண்டும் நேருவிடம் கொடுத்து மக்களாட்சியாக அது வந்துள்ளது ". 

" அந்த செங்கொலை நாம் எங்கும் பார்த்தது கிடையாது. தற்போது அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் இருக்கப் போகிறது. வருகின்ற காலத்தில் செங்கோல் இல்லாமல் ஆட்சி இல்லை என்ற அளவிற்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார். இதனை கலந்த சில தினங்களாக எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதீனமே விளக்கம் அளித்துள்ளார் " . 

" தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எம்பிக்களும் இதில் பங்கேற்க வேண்டும். இந்த பாராளுமன்ற கட்டிடம் புதிதாக வரக்கூடிய எம்பி களுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஒன்று நூறு வருடங்கள் கழித்தாலும் கிடைக்காது. எம்பிக்கள் இதில் பங்கேற்கவில்லை என்றால் இது ஒரு சரித்திர பிழையாக மாறிவிடும் ". 

" எந்த ஒரு அரசியலையும் சாராத பிரதமர், அவர் ஒரு கட்சியை சார்ந்திருந்தாலும் பிரதமர் என்கின்ற அந்த வார்த்தை அரசியல் கட்சியை தாண்டி இருக்கக்கூடிய ஒரு வார்த்தை. தற்போது உள்ள எதிர்க்கட்சியினர் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள் "

" தமிழகத்தை தற்போது மிகப்பெரிய அளவில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். அவர்கள் தவறு செய்து இருக்கிறார்கள் அதனால் சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது கரூர் பொது கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என அவரை கூறியுள்ளார், அதுமட்டுமின்றி அவரது சகோதரர் அசோக்கின் பெயரையும் கூறிவிட்டு வந்துள்ளார் ". 

" தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தவுடன் அவர் ஒரு புண்ணியவான் என்று ஆர் எஸ் பாரதி கூறுகிறார். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சோதனையானது இறுதி கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதை எங்களத எதிர்பார்ப்பு. பீகாரில் எல்லாம் சோதனை நடைபெறும் பொழுது யாருக்கும் ஒரு கீறல் கூட விடவில்லை ஆனால் தற்பொழுது கரூரில் சோதனைக்கு சென்று அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களிடம் ஏற்கனவே கூறிவிட்டு வந்திருக்க வேண்டும் என நம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார்" .

" அவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன்:-  எங்காவது சோதனைக்கு செல்வதை கூறிவிட்டு வருவார்களா?. என்னுடைய தகவலின்படி கரூரில் சோதனை மேற்கொண்டு 1 மணி நேரம் 12 நிமிடம் கழித்து தான் காவல்துறையினர் அங்கு சென்று உள்ளார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்பது இந்தியாவில் பேசு பொருளாக மாறி உள்ளது. முதலமைச்சர் சட்டமன்றம்  எவ்வாறு உள்ளது என்பதை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.பாரதி மீண்டும் என்னை வம்புக்கு இழுத்து உள்ளார்" .  " ஒரு பக்கம் அண்ணாமலை சாதாரண ஆள் என்று கூறிவிட்டு சோதனை என்று வரும்போது அதற்கும் அண்ணாமலை தான் காரணம் என்று கூறுகிறார். பி டி ஆரின் ஆடியோ விவகாரத்தில் ஏதேனும் விவாதத்தை முன் வைத்தீர்களா?. அப்போதெல்லாம் எதுவும் கூறாமல் செந்தில் பாலாஜி என்று வரும்போது விவாதம் செய்தால் யாரிடம் பணம் இருந்தால் அவர்களுக்கு திமுகவில் மரியாதை என்று மக்களுக்கு புரிகிறது. ஆர்.எஸ்.பாரதி கூறியதற்கான பதில் 2024ல் இருக்கும் .  இரு மொழிக் கொள்கையை பற்றி என்னுடைய கருத்தில் முரண்பாடு உள்ளது எனவும், அமைச்சர் பொன்முடி விவாதத்திற்கு வரவேண்டும் எனவும்,  கூறி இருக்கிறார்" . 

அதோடு, " மருத்துவக் கல்வி பொறியியல் கல்வி எல்லாம் தாய் மொழியில் மாறி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாறவேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம் தமிழ் வழி பொறியியல் கல்வியை நிறுத்தி உள்ளார்கள். இதை கண்டித்து அறிக்கை அளித்த பின்பு தங்களுக்கு தெரியாமல் இதை அறிவித்து விட்டார்கள் என திமுகவினர் கூறுகிறார்கள். அமைச்சர் பொன்முடி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்". 

" இதில் தமிழக அரசுக்கு ஒரு உள்நோக்கம் உள்ளது.  இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் பொன்முடியின் மகன் எந்த பள்ளியில் படித்தார் அது இரு மொழியா ?  மும்மொழியா? உங்களது பேரன் பேத்தி எந்த பள்ளியில் படிக்கிறார்கள் அது இருமொழியா மும்மொழியா? முதலமைச்சரின் பேரன் பேத்திகள் படிப்பது இருமொழியா? மும்மொழியா?.  எனவே என்னுடன் விவாதத்திற்கு வரும் பொழுது அனைத்தையும் தயார் செய்துவிட்டு வாருங்கள். உங்களுடைய குடும்பத்தினர் மட்டும் பழமொழிகளை கற்றுக்கொண்டு உலகத்தை ஆள வேண்டும். உங்களுடன் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயார் நேரத்தையும் இடத்தையும் கூறுங்கள் நான் விவாதத்திற்கு வருகிறேன். அனைத்தையும் விவாதிப்போம் அனைத்தையும் தோலுரித்துக் காட்டுவோம் " . 

" முதலமைச்சர் வெளிநாடு செல்ல வேண்டும் அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் வெளிநாடு சென்று விட்டு வரும்பொழுது எதனைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன் அவர் துபாய் சென்று வந்தது குறித்தும் பல்வேறு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்ன என்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை கூறுங்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுடைய திட்டங்கள் என்ன என்பதை கூறுங்கள் " .

" அண்டையில் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு 50 சதவிகித முதலீடு ஒரே மாநிலத்திற்கே செல்கிறது. பல்வேறு மாநிலங்கள் முன்னேறி வருகிறது நம்முடைய வேகம் குறைந்துள்ளது. எனவே முதலமைச்சரின் வெள்ளை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். உதயநிதி பவுண்டேஷன், ரெட் ஜெயன்ட் மூவி எல்லாம் மணிலாண்டரி, திமுக வந்த பிறகு பல்வேறு விஷயங்களை மணிலாண்டாரியாக மாற்றி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த வருமானவரித்துறை சோதனை ஒரு இரு நாட்களில் முடிவது போல் தெரியவில்லை" . 

" தமிழகம் தற்போது இந்தியாவில் நான்காவது பொருளாதார மாநிலமாக உள்ளது. இந்நிலையில் மதுவிற்கு அடிமையாகி வந்தால் பஞ்சாப்பை போல் மதுவிற்கு அடிமையான மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். அதேபோல் நடைபெறுகின்ற சோதனைகளுக்கு என் மீது பழி போடுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. 
தமிழ்நாட்டையே சாராய மாநிலமாக மாற்றி இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் சோதனையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வருமான வரித்துறை அறிக்கை வெளியிடும் வரை நாம் பொறுத்திருக்கலாம்", என்று கூறினார்.  

தொடர்ந்து பேசுகையில்,  " 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிவிட பிரதமர் கூறினால் அது டிராமா என சொல்கிறார்கள். பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தால் அதனையும் பாஜகவின் டிராமா எனக் கூறுகிறார்கள். அதேபோல் தற்பொழுது சோதனை நடைபெற்றால் அதனையும் டிராமா எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால் நீங்கள் எதை செய்தீர்கள் என மக்களிடம் தெரிவியுங்கள். ஆவின் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒரு டிராமா என நான் கூறுகிறேன். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் வாங்கும் அளவு 35 லட்சத்திலிருந்து 32 லட்சமாக குறைந்துள்ளது. தற்போது பால்வளத்துறை அமைச்சர் உள்ளார்கள். ஆவினின் செயல்பாடு குறையை மறைப்பதற்காக அமுல் மீது பழி சுமத்துவது என்பதுதான் டிராமாவே தவிர நாங்கள் செய்வது ட்ராமா இல்லை", என்றும் கூறினார். 

மேலும்,  " செங்கோலில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் இல்லை; தற்போதுள்ள 'நடைமுறையில்  தமிழ் எழுத்துக்கள் தான் உள்ளது' என கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது மிகவும் நல்லது தான், அனைவருக்கும் புரியக்கூடிய எழுத்துக்கள் அதில் இருந்தால் அதனை பார்த்து படிக்கலாம்" என்று பதிலளித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com